சங்கடம் தீர்க்கும் சனீஸ்வரர் ஆலயங்கள்
தமிழ்நாட்டில் உள்ள சில கோவில்களை இங்கே குறிப்பிடுகிறேன் முடிந்தால் சென்று வழிபட்டு வாருங்கள்.
* திருநள்ளாறு (காரைக்கால்)
காரைக்கால் அருகே உள்ளது திருநள்ளாறு. நள மகா சக்கரவர்த்தியின் ஏழரை நாட்டு சனி விலகிய தலம் இது. இங்குள்ள நள தீர்த்தம் விசேஷம் மிக்கது. இந்த குளத்தில் நீராடி, தர்ப்பாரண்யேஸ்வரரையும், சனி பகவானையும் வழிபாடு செய்தால், சனி தோஷங்கள் விலகும்.
* குச்சனூர் (உத்தமபாளையம்)
தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் உள்ளது குச்சனூர். இங்கு சனி பகவான் சுயம்பு மூர்த்தியாய் அருள்கிறார். கல் தூணாக பூமியில் இருந்து தோன்றிய மூர்த்தம் இது. இந்த இறைவனுக்கு மஞ்சள் காப்பு சாத்துகிறார்கள். சூரியனின் மகன் என்பதால் நாமமும், ஈஸ்வர பட்டம் பெற்றிருப்பதால் விபூதியும் அணிவிக்கிறார்கள்.
* எட்டியத்தளி (அறந்தாங்கி)
புதுக்கோட்டை, அறந்தாங்கியில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது எட்டியத்தளி. அகத்திய மாமுனிவர் காசி விஸ்வநாதரை வணங்கி விட்டு, இந்த திருத்தலத்திற்கு வருகை தந்தார். அப்போது அஷ்டம சனியால் பாதிக்கப்பட்டிருந்த தொண்டை மண்டல மன்னன் காளிங்கராயன், தன்னுடைய சனி தோஷம் நீங்குவதற்காக திருநள்ளாறு திருத்தலத்திற்கு இந்த வழியாகச் சென்றார். அந்த மன்னனை அகத்தியர் தடுத்து நிறுத்தி, அஷ்டம சனிக்கு பரிகாரமாக தான் பூஜித்த அகத்தீஸ்வரருக்கும் அகிலாண்டேஸ்வரிக்கும், இங்கு ஒரு ஆலயம் அமைத்து வழிபடும்படி அறிவுறுத்தினார். மேலும் நவக்கிரகங்களையும் பிரதிஷ்டை செய்யும்படியும், ஈசனின் ஈசான பார்வை சனி பகவானின் மீது படும்படியும் ஆலயத்தை அமைக்கக் கூறினார். அதன்படியே செய்த மன்னனின் சனி தோஷம் நீங்கியது. சிறந்த சனி தோஷ பரிகாரத் தலங்களில் எட்டியத்தளி ஆலயமும் ஒன்றாக விளங்குகிறது.
* மங்கம்மாபேட்டை (அரக்கோணம்)
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அருகே உள்ளது மங்கம்மாபேட்டை. இங்குள்ள ஆலயத்தில் சனி பகவான், தன்னுடைய மனைவி நீலாதேவியை மடியில் அமர்த்தியபடி கல்யாண சனீஸ்வரராக காட்சியளிக்கிறார்.
* பொழிச்சலூர் (பல்லாவரம்)
சென்னை பல்லாவரத்தை அடுத்துள்ளது பொழிச்சலூர் திருத்தலம். இங்கு பழமையான அகஸ்தீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் சனி பகவானும் ஒரு வரப்பிரசாதியாக இருந்து அருள்பாலிக்கிறார். சனீஸ்வர பகவான் நேரடியாக இத்தல இறைவனை பூஜித்ததாகவும், இங்குள்ள நள்ளாறு தீர்த்தத்தில் நீராடி தன்னுடைய தோஷத்தை போக்கிக் கொண்டதாகவும் தல வரலாறு சொல்கிறது.
* சோழவந்தான் (மதுரை)
சோழவந்தானில் இருந்து குருவித்துறைக்குப் போகும் பாதையில் சனி பகவான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் முருகப்பெருமானுக்கு ஆலயம் அமைத்து வழிபட நினைத்தார்கள். அதற்காக சிலை வடிக்க ஏற்பாடு நடைபெற்றது. ஆலயம் கட்டி, கருவறையில் முருகனின் சிலையை அமைக்க அனைவரும் காத்திருந்தனர். அந்த நேரத்தில் காஞ்சி மகாமுனி, ‘இது சனி பகவான் சிலை. உங்கள் ஊரில் நிறுவி வழிபடுங்கள்’ என அடையாளம் காட்டி ஆசி அளித்தார். தனது மேல் கரங்களில் ஆயுதங்கள் தரித்து, கீழ் வலது கரம் அபய ஹஸ்தமாகவும், கீழ் இடது கரம் கதாயுதம் ஏந்தியும் சனி பகவான் காட்சி தருகிறார்.

கருத்துகள்
கருத்துரையிடுக